உவரி அந்தோணியார் ஆலய திருவிழாவில் நேற்று நடந்த மாலை ஆராதனையில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
அந்தோணியார் ஆலயம்
தென் மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி புனித அந்தோணியார் ஆலயம்.
இங்கு ஆண்டு தோறும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் தமிழகம் மட்டும் இல்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20–ந் தேதி கொடிஏற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது.
பெருவிழா ஆராதனை
விழாவில் நேற்று மாலையில் ஆலயம் முன்பு பெருவிழா மாலை ஆராதனை நடந்தது. இதை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி, நடத்தி வைத்தார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து மலையாளத்தில் திருப்பலி நடக்கிறது. 4–ந் தேதி திருப்பலி, நற்கருணை நடத்தப்பட்டு கொடி இறக்கப்படுகிறது.
ஏற்பாடுகளை பங்கு தந்தைகள் ஜோசப் பபிஸ்டன், திருத்தல நிதிக்குழு, பங்கு மக்கள் மற்றும் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.