முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி, ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது.
பெர்த்தில் நடந்து முடிந்த இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.
இப்போட்டியில் 279 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 39.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களில் சுருண்டு தோல்வி கண்டது.
அந்த அணியில் போபரா அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். மொயீன் அலி 26 ரன்களையும், ரூட் 25 ரன்களையும் எடுத்தனர். பிராட் 24 ரன்களையும், பட்லர் 17 ரன்களையும் சேர்த்தனர். ஏனையோர் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில், மேக்ஸ்வெல் 4 விக்கெட்டுகளையும், ஜான்சன் 3 விக்கெட்டுகளையும், ஹாஸ்லேவுட் 2 விக்கெட்டுகளையும், ஃபவுல்க்னர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
முன்னதாக, ஆஸ்திரேலியா தனது இன்னிங்ஸ்சில், 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் மேக்ஸ்வெல் 95 ரன்களையும், மார்ஷ் 60 ரன்களையும் சேர்த்து அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாக கூட்டினர். ஃபவுல்க்னர் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தார். ஸ்மித் 40 ரன்களைச் சேர்த்தார்.
இந்தத் தொடரில் மற்றொரு அணியான இந்தியா மிக மோசமான தோல்விகளுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.