இந்திய மாம்பழங்களுக்கு விதித்த தடையை நீக்கியதை தொடர்ந்து, கத்திரிக்காய், பாகற்காய், புடலங்காய் உட்பட, நான்கு காய்கறிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையையும் நீக்க, ஐரோப்பிய யூனியன் நாடுகள் முடிவு செய்துள்ளன.இந்தியாவிலிருந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட, அல்போன்சா உட்பட, பல வகை மாம்பழங்கள் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி, அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால், விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகமும் தடைப்பட்டது. இதேபோல், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பாகற்காய், புடலங்காய், கத்திரிக்காய் மற்றும் சேப்பங்கிழங்கு போன்ற காய்கறிகளுக்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தடை விதித்தன.
இதன்பின், இந்திய அரசு மேற்கொண்ட முயற்சியால், மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை, ஐரோப்பிய யூனியன் அகற்றியது. இந்நிலையில், டில்லி வந்த ஐரோப்பிய யூனியன் அமைச்சர் வின்ஸ் கேப்லே, மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். அப்போது, இந்திய காய்கறிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருவதாக உறுதி அளித்தார்.
இதுகுறித்து, மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் கூறுகையில், மாம்பழங்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கத்தால், விவசாயிகள் பெரிதும் பயனடைவர். அதே போல், இந்திய காய்கறிகள் மீதான தடையையும் நீக்க, ஐரோப்பிய யூனியனில் இடம் பெற்றுள்ள, 28 நாடுகளும் பரிசீலித்து வருகின்றன. அதனால், இந்திய காய்கறிகள் ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பயனடைவர் என்றார்.