2013-14-ம் நிதி ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) 6.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் (யுபிஏ) பொருளாதார நடவடிக்கைகளே காரணம் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையை யுபிஏ அரசு மிகச் சிறப்பாக மேற் கொண்டதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
2013-14-ஆம் நிதி ஆண்டுக்கான திருத்தப்பட்ட ஜிடிபி அட்ட வணை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு காரணிகளும் குறிப்பிட்ட இலக்கை எட்டும் வகையில் உள்ளதை காட்டுவதாக அவர் செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
தான் நிதி அமைச்சராக இருந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு மே வரையில் நிதி கட்டுப்பாடுகள் ஒழுங்காக மேற்கொள்ளப்பட்டன. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை (சிஏடி) கட்டுப்படுத்துவது, பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது, பொருளாதார வளர்ச்சியை முடுக்கி விடுவது மற்றும் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வது ஆகிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.
மத்திய அரசு திருத்தப்பட்ட ஜிடிபி அட்டவணையை வெளியிட்டது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள சிதம்பரம், இதன் மூலம் யுபிஏ அரசு மீது தவறான பிரசாரம் செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலையை காங்கிரஸ் அரசு சரிவர கையாளவில்லை என்ற தவறான பிரச்சாரத்துக்கும் இதனால் முடிவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஜிடிபி ஆண்டு மாற்றம்
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அளவைக் கணக்கிட 2011-12-ஆம் நிதி ஆண்டு அடிப்படை ஆண்டாகக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2004-05-ஆம் நிதி ஆண்டுதான் அடிப்படை ஆண்டாக கணக்கிடப்பட்டது.
முன்பு 2013-14-ஆம் நிதி ஆண்டின் ஜிடிபி 4.7 சதவீதம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ஜிடிபி 6.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அளவீட்டின்படி 2012-13-ஆம் நிதி ஆண்டின் ஜிடிபி 5.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முன்பு 4.5 சதவீதம் என முன்னர் கணக்கிடப்பட்டிருந்தது.
2012-13 மற்றும் 2013-14-ஆம் நிதி ஆண்டுகளில் திருத்தப்பட்ட ஜிடிபி அளவீடுகளின்படி சுதந்திரத்துக்குப் பிறகு நாடு கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது புலனாகிறது. அடுத்து வந்துள்ள அரசு யுபிஏ அரசின் சாதனைகளை முறியடிக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சியை எட்ட வாழ்த்துகிறேன் என்று அறிக்கையில் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2 நிதி ஆண்டுகளில் நாட்டின் பொருளாதர வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் கீழாக இருந்தது என்று ஆட்சியாளர்கள் சொல்வதை இனியாவது நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சிக்கு யுபிஏ அரசு செயலாற்றியதோடு எதிர்க்கட்சிகளின் பங்களிப்பும் அதில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசு என்பது அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்போடு செயல்படுவதுதான். அதிகபட்ச பொருளாதார வளர்ச்சியை வரும் ஆண்டுகளில் எட்டுவதற்கு பாடுபட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்