Home » Entertainment Videos » ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: முட்கல் கமிட்டி அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டது 7 பேர் பெயர் அம்பலம்

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: முட்கல் கமிட்டி அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டது 7 பேர் பெயர் அம்பலம்

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் குறித்து முட்கல் கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள 7 பேரின் பெயர்களை சுபரீம் கோர்ட்டு நேற்று வெளியிட்டது.

ஐ.பி.எல். சூதாட்டம்
6–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சூதாட்டம் குறித்து முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான கமிட்டி முதல் கட்ட அறிக்கை கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்தது. அதில் என்.சீனிவாசன் உள்பட 13 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. முட்கல் கமிட்டி இறுதி அறிக்கை கடந்த 3–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யப்பட்டது.

முட்கல் கமிட்டி அறிக்கை மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தாக்கூர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று நடந்தது.
7 பேர் பெயர் வெளியீடு
இந்த விசாரணையின் போது முட்கல் கமிட்டி அறிக்கையில் இடம் பெற்றுள்ளவர்களில் 7 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டது. அதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மனும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்கும் என்.சீனிவாசன், ஐ.பி.எல். தலைமை செயல் அதிகாரி சுந்தர்ராமன், சென்னை சூப்பர் கிங்ஸ் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ்குந்த்ரா, இந்திய அணியின் ஆல்–ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி, வெஸ்ட் இண்டீசை சேர்ந்த சாமுவேல் பத்ரீ, இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஒவைஸ்ஷா ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால் அவர்கள் மீதான குற்றச்சாட்டு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த வழக்கு விசாரணை வருகிற 24–ந் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நீதிபதி தாக்கூர் கூறுகையில், ‘முட்கல் கமிட்டி அறிக்கையை படித்து பார்த்தோம். அதில் சில நபர்கள் தவறு செய்தது குறிப்பிடப்பட்டுள்ளது. வீரர்கள் பெயரை வெளியிடக்கூடாது என்று முடிவு செய்து இருந்தோம். வெளியிடப்பட்ட பெயர்களில் 3 பேர் வீரர்கள் என்பது தெரியாததால் வெளியாகி விட்டது’ என்று தெரிவித்தார். பெயர் வெளியிடப்பட்டு இருக்கும் நபர்கள் 4 நாட்களுக்குள் தங்கள் தரப்பு ஆட்சேபனையை தெரிவிக்கலாம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுக்குழு கூட்டம் தள்ளிவைப்பு
முட்கல் கமிட்டி அறிக்கை மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டு இருப்பதால் வருகிற 20–ந் தேதி நடக்க இருந்த இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம் ஒரு மாதம் தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முட்கல் கமிட்டி அறிக்கையில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயரை சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டு இருப்பதற்கு ஐ.பி.எல். முன்னாள் சேர்மன் லலித்மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus