தமிழகத்தில் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஆதரவாக சிலரும், அதற்கு எதிராக இயற்கை விவசாயத்தை ஆதரித்தும் தொலைக்காட்சியில் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் வேளையில், சத்தமில்லாமல் அமெரிக்காவில் இயற்கை விவசாயம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் நலவாழ்வு நண்பர்கள் என்ற குழுவினர், இயற்கை விவசாயம் மூலம் வீட்டு தோட்டங்கள், சமூக தோட்டங்கள் அமைக்க முயற்சி எடுத்துள்ளனர்.
நம்மாழ்வார் நினைவு விதை நாள் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைந்த டிசம்பர் 30 நாள் தமிழகத்தில் விதை நாள் என கடைப்பிடிக்கப்படுகிறது. அந்நாளில் மாற்றியமைக்கபடாத உணவு விதைகளைப் பாதுகாக்க வேண்டிய தேவையைப் பற்றி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் நோக்கமாகும்.
அதே நாளில் அமெரிக்காவிலும் விதை நாளை அனுசரித்து இயற்கை விவசாயம் செய்வதற்கான முயற்சியில் கலந்துரையாடல் நடைபெற்றது. அமெரிக்க வீடுகளின் பின்புறம் தோட்டங்கள் அமைக்க ஏதுவாக இட வசதி உண்டு. அதில், தங்கள் மற்றும் நண்பர்கள் குடும்பங்களுக்கு தேவையான காய்கறிகளை பயிரிடுவது வழக்கம்.
வீட்டுத் தோட்டங்களை முற்றிலும் இயற்கை முறையில் மாற்றி அமைக்க நலவாழ்வு நண்பர்கள் முடிவு செய்துள்ளனர். இதை மற்ற நகரிங்களிலும் ‘நலவாழ்வு நண்பர்கள்’ என்ற குழுக்களாக விரிவுபடுத்த உள்ளனர். டாக்டர் பானுகோபன் இயற்கை உரம் தயாரிப்பது, பூச்சி மற்றும் களைகளைக் கட்டுப்படுத்துவது, உள்ளிட்ட பல விவரங்களை எடுத்துரைத்தார். சொட்டு நீர்ப் பாசனம், பல்பயிர் வேளாண்மை குறித்தும் விவரித்தார்.