Home » Spiritual News » வீரபத்திரர் தலங்கள்

வீரபத்திரர் தலங்கள்

09d1db19-fabc-4c90-b52f-7b462f6bb085_S_secvpf.gifதட்சனின் யாகத்திற்கு வந்தவர் அனைவரின் தீமைகளையும் பறித்துக்கொண்டதால் பறியலூர் என்றழைக்கப்படலாயிற்று. மாமனின் தலையைப் பறித்ததால் மாமன் பறியல் என்றும், தட்சன் வேள்வி செய்த தலமாதலால் தட்சபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. அட்டவீரட்டத் தலங்களில், எம்பெருமான், தானே வராமல், தனது கண்ணில் இருந்து தோன்றிய வீரபத்திரரை அனுப்பி, தட்சனுக்குப் பாடம் புகட்டிய தலம் இது.

மயிலாடுதுறை – பொறையார் சாலையில் செம்பொனார்கோவில் என்ற திருத்தலத்திற்குத் தெற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. தீமைகளை அகற்றும் பரிகாரத்தலம் ஆனதால், மேற்குத் திசை நோக்கியபடி வீரட்டேசுவரர் திருக்கோயில் இங்கு அமைந்துள்ளது. ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. ஆலயத்திற்குத் தெற்கே உள்ள உத்தரவேதி தீர்த்தமே, தட்சன் செய்த வேள்விக் குண்டம் என்றும் கூறுவர்.

பெரும்பேர் கண்டிகை:-

சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூருக்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் இது. ஊருக்குள்ளே மையமாக, கிழக்கு நோக்கி அமைந்துள்ளது வீரபத்திரர் திருக்கோயில். வடமேற்கு முனையில் பத்திரகாளி சன்னதியும் உள்ளது.

வீராவாடி:-

திருவாரூருக்கு வடக்கே மயிலாடுதுறை செல்லும் சாலையில், 20 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்னும் ஊருக்குக் கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. அம்பன், அம்பாசுரனைக் கொன்ற காளிக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துவிட, அதனை விரட்டிடவே சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பியதாகத் தல வரலாறு கூறுகிறது. மூலவராக நான்கு கரங்களோடு நின்ற கோலத்தில் வீரபத்திரர் காட்சி தருகிறார். வீரபத்திரர் அடிபதித்த தலம் என்பதால் வீராவடி என்று அழைக்கப்படுகிறது.

பெருந்துறை:–

கும்பகோணம் – காரைக் கால் வழியில் நாச்சியார் கோவில் அருகில் இரவாஞ்சேரியிலிருந்து 1 கி.மீ தூரத்தில் வீரபத்திரசாமி கோவில் உள்ளது. இத்தலத்து வீரபத் திரர் செவ்வாய் தோசத்தைப் போக்கவல்லவர் என்றும், நேர்மையான வழியில் வாழ்பவர்களுக்கு துணையாக இருந்து காப்பவர் என்றும் போற்றப்படுகின்றார்.

மதுரை:-

மீனாட்சி யம்மன் கோவிலில் அகோர வீரபத்திரர் சன்னிதி உள்ளது. தக்கன் யாகத்தைச் சிதைக்க சிவபெருமானால் தோற்று விக்கப்பட்டவர் என்ற வரலாறு உண்டு. அகோரமூர்த்தியின் கோலம் பார்க்க பரவசமூட்டும். இடக்காலை முன் வைத்து, வலக்கால் கட்டை விரலையும் அடுத்த விரலையும் ஊன்றி நடக்கின்ற கோலம் அருமையாக இருக்கிறது. இவர் தோன்றிய காலம் மாசிமாதம், கிருஷ்ணபட்சம், பிரதமை திதி, பூரநட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை, இரவு 12.00 மணி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆண்டு தோறும் விழா (அதாவது அகோரபூஜை) நடக்கிறது.

திருவெண்காடு:-

சீர்காழிக்குத் தென்கிழக்கில் 1 கி.மீ தொலைவில் அகோர மூர்த்தி கோவில் உள்ளது. சிவனின் கோபத்தில் உதித்தவர் என்பதால் திருவெண்காடு வீரபத்திரரை நமஸ்தே ருத்ர மன்யவே  என வணங்க வேண்டும் என்கிறார்கள்.

அம்மாபேட்டை ஸ்ரீஅகோர வீரபத்திரசாமி:-

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள வீரபத்திர சாமிக்கு எழுமிச்சை மாலை சாற்றி வழிபட்டால் பேய், பிசாசு, பில்லி, சூனியம், செய்வினை கள் அகன்று அவர்களுக்கு நல் வாழ்வு கிடைக்கும். வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டு வந்தால் திரு மணம், புத்திர (குழந்தை) பாக்கியம் கிடைக்கும். நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்தால் வீடு கட்டுதல், நிலம் வாங்குதல் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். இந்த பூஜையில் வீடு கட்டுபவர்கள் மணல் வைத்து பூஜை செய்து அதை கட்டிடத்தில் வைத்து கலந்து கட்டுவது இன்று வரை நடந்து வருகிறது.

பில்லி சூனியத்தை நீக்கும் அகோர வீரபத்திரர்:-

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் புகழ்பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. பில்லி, சூனியம் விலக பக்தர்கள் இங்குள்ள அகோர வீரபத்திரரை வணங்கி செல்கிறார்கள். பயம் மற்றும் எதிரிகள் தொல்லை நீங்கவும் இவரை வழிபட்டு செல்கிறார்கள். குடும்ப ஒற்றுமையை அளிக்கும்சேலம் குகை வீரபத்திரர்:- சேலம் குகையில் உள்ள நரசிங்கபுரம் தெருவில் வீரபத்திரசாமி கோவில் உள்ளது.

ஜங்கம குலத்தின் குல தெய்வமாக விளங்கும் வீரபத்திரர் இங்கு நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார். வீரபத்திரருக்கு மொச்சைப்பயிறு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றை படைக்கின்றனர். குடும்ப ஒற்றுமைக்கும், பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேரவும் வீரபத்திரரை வேண்டிக் கொண்டால் வேண்டுதல் பலித்ததும் மூங்கில் இலைகளால் வீரபத்திரருக்கு மாலை அணிவிக்கிறார்கள்.

கயத்தாறு வீரபத்திரர் கோவில்:-

நெல்லை மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகுளத்தில் அமைந்துள்ளது வீரபுத்திரசுவாமி கோவில். இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் ஆண்கள் மட்டுமே வழிபட்டு வருவதுதான். மேலும் ஆண்கள் மட்டுமே சுவாமிக்கு பூஜைகள் உள்பட பல்வேறு பணிவிடைகளை செய்கின்றனர். பெண் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்வதில்லை.

தென்காசி கோவில் :-

தென்காசி கோவிலில் தனியாக 2 கல்தூணில் வீரபத்திரர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில் களிலேயே இங்குள்ள வீரபத்திரர் சிலைதான் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வீரபத்திரருக்கு தனியாக எந்த வழிபாடும் நடத்தப்படுவதில்லை.

திருவானைக்காவல் வீரபத்திரர்:-

எதிரிகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெற இங்குள்ள வீரபத்திரரை வழிபடுகின்றனர். தும்பை, நந்தியாவட்டை முதலான வெண்மையான மலர்களாலும், வெண்பட்டாலும் இவரை அலங்கரித்து வழிபடுகின்றனர்.

திருஷ்டி நீக்கும் ஆரணிவீரபத்திரர்:-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதுகாமூர் பகுதியில் ஆற்றங்கரை அருகே குழந்தைபேறு அருளும் ஸ்ரீபெரிய நாயகி புத்திர காமேட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள வீரபத்திரரை வழிபட்டால் சிருஷ்டி உபாதை சத்ரு உபாதைகள் மறையும், மாசி மாதம் இவருக்கு உகந்த மாதமாகும். இந்த கோவிலில் காணும் பொங்கல் அன்று சுற்றுபடி திருவிழா நடைபெறும். நிலம் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்க இத்தல வீரபத்திரரை வேண்டி தரிசிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus