ஸ்காட்லாந்து, நாம் எவ்வளவு காலம் வாழ்வோம், ஒரு மனிதன் எப்போது உயிரிழப்பான் என்பதற்கு விடையளிக்கும் புதிய உயிரி கடிகாரத்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. எடின்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிபுணர்கள் ஆகியோர் 14 வருடங்களுக்கு மேலாக, வயதான மனிதர்கள் 5,000 பேரை கண்காணித்து நான்கு விதமான ஆய்வுகளை நடத்தினர்.
டி.என்.ஏ.வில் நடைபெறும் மெத்தைலேஷன் என்ற வேதியியல் மாற்றங்களை வைத்து தனி மனிதனின் உயிரியல் வயதையும், தற்போது அந்த குறிப்பிட்ட மனிதரின் வயதையும் விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.
அதில் உண்மையான வயதும், உயிரி வயதும் ஒரே மாதிரியாக இருப்பவர்களை காட்டிலும், உண்மையான வயதை விட உயிரி வயது அதிகமாக இருப்பவர்கள் மரணத்தை விரைவில் நெருங்குகிறார்கள் என்பதை கண்டுபிடித்தனர். ஒவ்வொரு நபரின் உயிரி ஆயுளும் அவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில் இருந்து கணக்கிடப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் ஆய்வின் போது தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டனர்.
இந்த ஆய்வு குறித்து ரிக்கார்டோ மரியோனி கூறுகையில், நான்கு ஆய்வுகளின் படி உயிரி கடிகாரத்தின் வயதும், புகை பிடித்தல், டயாபட்டீஸ் மற்றும் இதய நோய் காரணமாக இறந்தவர்களின் வயதும் ஒத்திருந்தது என கூறினார்.