பம்பை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணியை தொடங்கியுள்ள கேரள அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் கேரளாவுக்கு 30 டிஎம்சி அடி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயநாட்டில் இருந்து கபினிக்கு செல்லும் வழியில் 21 டிஎம்சி அடி தண்ணீரும் பவானியில் 6 டிஎம்சி அடி தண்ணீரும் அமராவதியின் கிளை நதியான பம்பை ஆற்றில் 3 டிஎம்சி அடி தண்ணீரும் எடுத்துக் கொள்ள கேரளாவுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
காவிரியின் கிளை நதியாக அமராவதி உள்ளது. இதன் கிளை நதியான பம்பை ஆற்றில் பட்டிசேரி என்ற இடத்தில் கேரள அரசு 2 டிஎம்சி அடி நீரை தேக்கி வைக்கும் வகையில் அணை கட்ட முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு கேரள முதல்வர் கடந்த 3-ம் தேதி அடிக்கல் நாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரள மாநில அரசின் இந்த நடவடிக்கை, 5.2.2007-ல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்புக்கு எதிரானதாகும்.
பிரதமருக்கு கடிதம்
இதில் உடனே தலையிட்டு அணை கட்டும் முயற்சியை தடுக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, இதுபோன்ற செயல் களை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
கேரளாவின் பட்டிசேரி அணை திட்டம் குறித்த விவரங்களை வழங்கும்படி கேட்டு தமிழக அரசு சார்பில் கேரள அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அணை கட்டும் முயற்சியால் அமராவதி அணைப் பகுதியில் உள்ள விவசாயிகளின் பாசனம் மற்றும் குடிநீர் தேவை பாதிக்கப்படும் என்ற விவரமும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. நடுவர் மன்றம் கேரளாவுக்கு 3 டிஎம்சி அடி தண்ணீர் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தண்ணீரை எடுத்துக் கொள்வதற்கு தேவையான பல்வேறு திட்டங்களை கேரள அரசு ஏற்கனவே நிறைவேற்றி வருகிறது.
தீர்ப்புக்கு எதிரானது
காவிரி மேலாண்மை வாரி யத்தால் மட்டுமே நீர் பங்கீட்டு அளவை கண்காணிக்க முடியும். அத்தகைய வாரியம் இன்னும் அமைக்கப்படாத நிலையில் புதிதாக கேரளா அணைகட்டும் முயற்சியில் ஈடுபடுவது நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான செயலாகவே அமையும்.
மேலும் பட்டிசேரியில் அணை கட்டினால் அமராவதி படுகையில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே இந்த நடவடிக்கைகளை உடனே நிறுத்த கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும். தற்போதைய நிலையே தொடரவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு காவிரி தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இணைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்படும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.