வாஷிங்டன், ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி, எல்லை தாண்டிய தாக்குதல் நடத்தக்கூடாது என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எல்லையில் தாக்குதல் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி தந்து வருகிறது. இருந்தும் பாகிஸ்தான் திருந்தாமல், தாக்குதல்களை தொடர்கிறது.
இந்தியா வருகிறார் ஒபாமா, டெல்லியில் 26-ந் தேதி நடைபெறுகிற இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலந்து கொள்கிறார். இதற்காக அவர் 25-ந் தேதி டெல்லி வருகிறார். ஒபாமா வருகையையொட்டி டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை இந்த நிலையில், ஒபாமா வருகையின்போது இந்தியாவில் எல்லை தாண்டிய தாக்குதல்கள் நடத்தக்கூடாது, தாக்குதலுக்கான முயற்சிகளும் கூடாது என பாகிஸ்தானை அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வட்டாரங்கள் கூறுகையில், “ஒபாமா வருகையின் போது இந்தியாவில் எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தினால், பாகிஸ்தான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்றன.
தூதரகமும் உஷார் பில் கிளிண்டன், அமெரிக்க அதிபராக இருந்தபோது, 2000-ம் ஆண்டு இந்தியா வந்தார். அப்போது 36 சீக்கியர்களை காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். எனவேதான் இப்படிப்பட்ட சம்பவம், மீண்டும் அரங்கேறக்கூடாது என்ற வகையில்தான் பாகிஸ்தானை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகமும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தீவிரவாத கும்பல்களின் செயல்பாடுகளை ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.