தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், அது தொடர்பான ஆய்வறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் சுதர்சன் நாச்சியப்பன் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழுவின் செயல்பாடு, இலங்கை இராணுவத்தினால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை ஆகியவற்றை ஆய்வு செய்ய எம்.பி. சுதர்சன் நாச்சியப்பன் தலைமையிலான பாராளுமன்ற நிலைக் (எம்.பி.க்கள்) குழு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வருகிறது.
இந்த குழு இராமநாதபுரம், ஐகோர்ட்டு மதுரை கிளை ஆகிய இடங்களில் ஆய்வுகளை நடத்திவிட்டு, சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மையத்தில் நேற்று ஆய்வு பணியை மேற்கொண்டது.
இதன்பின்னர், சுதர்சன் நாச்சியப்பன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மீனவர்கள், இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாவது குறித்து ஆய்வு செய்தோம். இலங்கை இராணுவத்தினால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, அவர்களது படகுகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட விவரங்கள் ஊடகங்களில் வெளியாவதால், சர்வதேச மற்றும் அகில இந்திய தொழிலதிபர்கள், தமிழகத்தில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.
இதனால், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, நாங்கள் இராமநாதபுரத்தின் மீனவர்களை சந்தித்து கருத்து கேட்டோம். அவர்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளோம். இதன்பின்னர் தலைமை செயலாளர், டி.ஜி.பி., கடல் படை அதிகாரிகள், டெல்லியில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் ஆகியோரிடம் கருத்துக்களை கேட்டுள்ளோம்.
அனைவரது கருத்துக்களையும் அறிக்கையாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வோம். இதனடிப்படையில், இலங்கையுடன் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி, இரு நாடுகளுக்கிடைய ஒருமித்த தீர்வு காணப்படும்.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், இதற்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதாவது, இலங்கையில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள், மீண்டும் தங்களது சொந்த இடத்தில் குடியமர்த்தப்பட்டு, அவர்கள் அனைவரும் அங்கு பாதுகாப்பாக இருக்கின்றனர் என்பதை உறுதி செய்த பின்னர், தமிழகத்தில் உள்ள அகதிகளை இலங்கைக்கு குடியமர்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
25 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு அனைத்து வகையான அடிப்படை உரிமைகளை பெற்று வாழும் இலங்கை தமிழ் அகதிகளை, துன்பப்படுத்தி இலங்கைக்கு அனுப்பக்கூடாது. மத்திய அரசு ஒரு அகதிக்கு ரூ.400 மட்டுமே வழங்குகிறது. ஆனால், அந்த தொகையை ரூ.1000-மாக உயர்த்தி தமிழக அரசு வழங்குகிறது என்றும் முதலமைச்சர் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்தும் அனைத்து தரப்பு கருத்துக்களை கேட்டு, மத்திய அரசுக்கு தெரியப்படுத்த உள்ளோம், இவ்வாறு அவர் கூறினார்.