Home » Indian News » மே மாதம் பிரதமர் மோடி சீனா பயணம்

மே மாதம் பிரதமர் மோடி சீனா பயணம்

பிரதமர் நரேந்திர மோடி மே மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தத் தகவலை, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டுள்ளார்.

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நான்கு நாள் பயணமாக கடந்த 31-ம் தேதி சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்குச் சென்றார்.

சீனாவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசும்போது, “பிரதமர் நரேந்திர மோடி மே மாதம் பெய்ஜிங்கில் சுற்றுப் பயணம் மேற்கிறார். அதற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும்.

கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு இரண்டாவது பாதையை திறப்பது குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதன்மூலம் பஸ்ஸிலேயே பக்தர்கள் செல்ல முடியும்” என்றார் அவர்.

தனது பயணத்தின் இரண்டாவது நாளான சனிக்கிழமை அவர், சீனா – இந்தியா ஊடகங்களின் 2-வது உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.

சுமார் 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பங்கேற்ற மாநாட்டில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசும்போது, “இந்திய – சீன ஊடக கூட்டமைப்பு இருநாட்டு மக்களும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இருநாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு இந்திய, சீன உறவு வலுவடைய வேண்டும். இருநாட்டு எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

இந்தியா- சீனா இடையேயான வர்த்தக உறவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. சீன நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

அதேபோல் இந்திய நிறுவனங்களுக்கும் சீன அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தில் 20 பில்லியன் டாலர் முதலீடு சீனா முன்வந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

சீன அமைச்சர் வலியுறுத்தல்

இந்த மாநாட்டைத் தொடங்கிவைத்து சீன தகவல் துறை அமைச்சர் ஜியாங் ஜியாங்கோ பேசும்போது, “இந்தியா – சீனா இடையே நட்புறவை வளர்க்க இருநாட்டு ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

பொருளாதார, வர்த்தக உறவு வளர உதவே வேண்டும். ஊடகத் துறையில் செய்திகள் பரிமாற்றம், கருத்து பரிமாற்றம், சீன, இந்திய பத்திரிகையாளர்களுக்கு இருநாடுகளும் திறந்தவாசலை ஏற்படுத்த வேண்டும்.

இந்தியாவும் சீனாவும் இப்போது முக்கியமான கட்டத்தில் உள்ளன. சீன அரசு தனது கனவுகளை நனவாக்க தீவிரமாக செயலாற்றி வருகிறது. அதேநேரம் இந்திய அரசு பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறது. இரு நாடுகளும் வலுவடைந்து, வளம் கொழிக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். அதற்காக இந்தப் பிராந்தியத்தை ஒருங்கிணைத்து பட்டுப்பாதை திட்டத்தை செயல்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

சீன டிராகனும் இந்திய யானையும் இணைந்து செயல்பட்டால் இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்கும் நன்மை பயக்கும். இதன்மூலம் இருநாடுகளையும் சேர்ந்த 250 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்” என்றார் அவர்.

அருணாசலப் பிரதேசம், காஷ்மீர் மாநிலங்களில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus