மகிந்த ராஜபக்சவின் 2015 ஜனாதிபதி தேர்தல் தோல்வி. நீதியை நோக்கிய பாதையில் நான் சந்தித்த,. பார்த்த மிக கொடுமையான படங்களை நினைவுபடுத்தியது. அரசபடையினர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் இறுதி வாரங்களில் 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.அரச படையினர் யுத்த குற்றங்களிலும்,மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்டனர் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் எந்த நீதிமன்றமும் அது குறித்து ஆராயவில்லை.
2010 இல் லண்டனின் சனல்4 படுகொலைகள் தொடர்பாக மிக திறமையான புலனாய்வு ஓளிநாடாவை வெளியிட்டது.அந்த வீடியோவில் காணப்பட்ட படங்கள் குறித்த எழக்கூடிய சட்டரீதியான தாக்கங்கள் குறித்து என்னை கருத்து கூறுமாறு கேட்டுக்கொண்டது.
யுத்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களில் நான் பாhத்த மிக கொடுரமான ஆவணம் அது.அதில் இலங்கை அரச படையினர் பொதுமக்களை சுட்டுக்கொல்வது காண்பிக்கப்படுகின்றது. இலங்கை இராணுவ வீரர் ஓருவர் மிகச்சாதராணமாக கண்களும் கைகளும் கட்டப்பட்ட கைதியை சுட்டுக்கொல்கின்றார். அந்த கைதியின் உடல் கொல்லப்பட்ட ஏனையவர்களின் உடல்களுடன் விழுந்து கிடக்கின்றது. இன்னொரு படைவீரன் இன்னொரு நபரை தலைக்கு மிக அருகில் துப்பாக்கியை நீட்டி சுட்டுக்கொல்கிறான். படைவீரர்களால் மிக மோசமாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பெண்ணொருவரை காணமுடிகின்றது.
ஓரு வருட காலத்திற்கு பின்னர் ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழுவொன்று நான் அந்த வீடீயோவை பார்த்த வேளை நினைத்ததை உறுதிசெய்தது: சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்கள் மிகமோசமாக மீறப்பட்டுள்ளது மறுகேள்விக்கிடமின்றி தெரியவருவதாக அது தெரிவித்தது.சித்திரவதைகள் இடம்பெற்றதற்கான அறிகுறிகளும், பரவலான கண்மூடித்தனமான எறிகணைவீச்சில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதற்கான ஆதராங்களும் உள்ளதாக அது குறிப்பிட்டது.
பொதுமக்களுக்கு எதிராக கொத்துக்குண்டுகளும், பொஸ்பரஸ்குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இவையும் ஏனைய பல ஆதாரங்களும் இலங்கை படையினர் யுத்தகுற்றங்களில். மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்களிலும் ஈடுபட்டனர் என்பதற்கான நம்பகதன்மை மிக்க ஆதாரங்களாக காணப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் இலங்கை குறித்த தனது விசாரணைகளை பூர்த்தி செய்யும் தறுவாயிலுள்ளது. இந்த அறிக்கை மார்ச்மாதம் வெளியாகவுள்ளது. ஐக்கிய நாடுகளின் முன்னைய விசாரணையில் தெரிவிக்கப்பட்ட பல விடயங்கள் இதிலும் காணப்படலாம்.
முன்னாள் ஜனாதிபதி தனது படையினர் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் யுத்தகுற்றங்கள் குறித்து விசாரிக்க மறுத்துவந்ததுடன், இலங்கை அரசமைப்பு அவரிற்கு பாதுகாப்பை அளித்தும் வந்தது. சர்வதே சட்டங்களும் நாடொன்றின் தலைவருக்கு வெளிநாடொன்றில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளிலிருந்து விடுபாட்டுரிமையை அளிக்கின்றன.
எனினும் இது அவர் பதவியிலிருக்கும் வரையே சாத்தியம். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இந்த விடுபாட்டுரிமையில்லை. இலங்கை படையினர்,அதன் ஆயுதகுழுக்கள்மற்றும் அதன் முகவர்களால் இழைக்கப்பட்ட யுத்தகுற்றங்களுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நீதியின் முன் நிறுத்துவதற்கான சந்தர்ப்பத்தை 2015 தேர்தல் முடிவுகள் அளித்துள்ளன.
நாட்டின் தலைவர் என்ற வகையில் தான் ஆற்றிய இராணுவபணிகளுக்காக தனக்கு விடுபாட்டுரிமை
(functional immunity) காணப்படுவதாக ராஜபக்ச வாதிடலாம், இது நாட்டின் தலைவர்களுக்கு பொருந்தாது மாறாக நாட்டின் தலைவராக பணியாற்றிய காலப்பகுதியில் அவர் ஆற்றிய கடமைகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது.
குற்றவியல் அல்லது வேறு வழக்குகளுக்கு அஞ்சி நாடொன்றின் தலைவர் தனது பணிகளை முன்னெடுக்காமல் விடக்கூடாது என்பதற்காகஇந்த வகை விடுபாட்டுரிமை ஸ்தாபிக்கப்பட்டது. எனினும் தனது கடமைகளை ஆற்றும்போதுயுத்த குற்றங்களில் ஈடுபட்ட அரச தலைவருக்கு இந்த விடுபாட்டுரிமை பொருந்துமா? இல்லை.
சில வழமைக்கு மாறான நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளபோதிலும், யுத்த குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போன்றவற்றை அரசகடமையாக கருதகூடாது. மேலும் இவற்றிற்கு பாதுகாப்பை வழங்க கூடாது. இவ்வாறான கொடுமையான செயற்பாடுகளை மேற்கொண்ட தலைவர்கள் அவர்கள் ஜனாதிபதிகள் என்பதற்காக பாதுகாக்க படுவார்கள் என்பது நினைத்து பார்க்க முடியாத விடயம்.
எனினும் இலங்கையின் புதிய ஜனாதிபதி முன்னைய அரச தலைவரும் அதிகாரிகளும் படைஅதிகாரிகளும் யுத்த குற்றங்களுக்காக விசாரிக்கப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் அவர் யுத்த குற்றங்களை இழைத்த தலைவருடன் உடன்பாட்டிற்கு வரமுயல்கின்றார். நீதியா சமாதானமா என்ற இரண்டில் ஒன்றை தெரிவு செய்யவேண்டும் என்ற பிழையான எதிர்பார்ப்பில் இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
எனினும் இது பிழையான முடிவு, மனித உரிமை மீறல்களால் ஏற்பட்டுள்ள மோசமான பிளவுகளுக்கு தீர்வை காண இலங்கை முயலவேண்டும்.விடுபாட்டுரிமை என்ற கொள்கை எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்திவிடும். விடுபாட்டுரிமை என்பது ஆபத்தானது-அநீதிகளை ஏற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளிகள் அரசியல் நியாயதன்மையையும், விடுபாட்டுரிமையையும் கொண்டுள்ள சமூகத்தில் எவ்வாறு நல்லிணக்கத்தை எதிர்பார்க்க முடியும்.
சர்வதேச அழுத்தம் என்பது இந்தவிடயத்தில் , இந்த தருணத்தில் மிக முக்கியமானது, அது சர்வதேச நீதியானையின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டது. மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு ஓவ்வொரு நாட்டிற்கும் கடப்பாடுள்ளது என்பதே இந்த சர்வதேச கொள்கையாகும்.அது எங்கு நடைபெற்றாலும், குற்றவாளி எந்த நாட்டவராக காணப்பட்டாலும், மனித உரிiயை பாதுகாக்கவும், சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் சர்வதேச சட்ட நெறிகளை நடைமுறைப் படுத்துவது முக்கியமானது. சர்வதேச சமூகத்தின் முன்னுரிமைக்குரிய விடயமாக இது காணப்படவேண்டும்.
இலங்கையில் இழைக்கப்பட்ட யுத்தகுற்றங்களுக்காக பொறுப்பு கூறுதல் என்பது காயங்களை ஆற்றும் இதனை விட முக்கியமாக யுத்தத்தின் இறுதிதருணங்களில் கொல்லப்பட்ட 40000 மக்களுக்கான குரலை வழங்கும். மீள்பதிவு செய்வோர் Mark Ellis மார்க் எலிஸ் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் – தமிழில் – குளோபல் தமிழ்ச் செய்திகள்: எனக் குறிப்பிட்டு மீள்பதிவு செய்யலாம்.