இலங்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கனகசபாபதி ஸ்ரீபவன் (62) பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிரானி பண்டாரநாயக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய முன்னாள் அதிபர் ராஜபக்ச, அவரை பதவிநீக்கம் செய்தார்.
இதைத் தொடர்ந்து மொகான் பெரீஸ் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ராஜபக்ச 3-வது முறை அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என்று உத்தரவு பிறப்பித்தது இவர்தான்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 8-ம் தேதி நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச தோல்வியைத் தழுவினார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்ரிபால சிறிசேனா அமோக வெற்றிபெற்றார்.
அந்த நாட்டு மரபின்படி புதிய அதிபருக்கு தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைப்பது வழக்கம். ஆனால் மொகான் பெரீஸ் முன்னிலையில் பதவியேற்க சிறிசேனா மறுத்துவிட்டார். எனவே நீதிபதி கனகசபாபதி ஸ்ரீபவன் புதிய அதிபர் சிறிசேனாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சில நாட்களுக்கு முன்பு சிரானி பண்டாரநாயக மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆனால் பதவியேற்ற ஒரேநாளில் அவர் ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக கனகசபாபதி ஸ்ரீபவன் நேற்றுமுன்தினம் பதவியேற்றுக் கொண்டார். அதிபர் சிறிசேனா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிய தலைமை நீதிபதி ஸ்ரீபவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஆவார்.