இந்து தர்மப்படி அமாவாசை தினங்களில் தான் விண்ணுலகில் உலவும் மறைந்த நம் முன்னோர் தங்களின் சந்ததியினரின் வேண்டுதல்களை- வழிபாடுகளை ஏற்க இப் பூவுலகிற்கு வருகிறார்கள் என்று காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது.
அதன் காரணமாகவே அமாவாசை நாட்களிலோ அல்லது அதற்கு ஓரிரு நாட்கள் கழித்தோ மூதாதையரை வழிபடும் வழக்கம் உள்ளது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை தினங்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை தினங்களில் விரதம் கடைபிடிப்பர்.
ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை தினங்களுக்கு என்று பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது தை அமாவாசை எனலாம். பல ஆண்டுகளாக மூதாதையர்களை நினைக்கத் தவறியவர்கள் தை அமாவாசை நாளில் மட்டும் தர்ப்பணம் செய்தாலே அந்த ஆண்டு முழுவதும் அவர்கள் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்ற ஒரு ஐதீகம் நிலவுகிறது.
வேலைப்பளு மற்றும் பல்வேறு நெருக்கடிகளால் அமாவாசை களை மறந்து விட்டோர் இந்த ஆண்டில் நாளை வரும் தை அமாவாசையை பயன்படுத்திக்கொண்டு மூதாதையர்களுடனான பூர்வ ஜென்ம தொடர்பை புதுப்பித்து வாழ்க்கையில் பலன் அடையலாம். இந்த ஆண்டு தை அமாவாசை நேற்று (திங்கட்கிழமை) இரவு 9.44 மணிக்கு தொடங்கியது. இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 7.52 மணி வரை அமாவாசை உள்ளது.
எனவே இன்று காலை விரதமிருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். பித்ருக்கள் வழிபாட்டை நாம் எந்த அளவுக்கு செய்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் வாழ்வில் அமைதி, ஆரோக்கியம், வசதி மேன்மைகளைப் பெறலாம்.
ஆடி அமாவாசையின் போது பூமிக்கு வரும் முன்னோரை தை அமாவாசையில் கொடுத்து மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைப்போம். இதனால் நமது தலைமுறையினர் வாழ்வாங்கு வாழ்வார்கள்.