இலங்கையில் மூன்றாவது முறையாக அதிபர் பதவியை கைப்பற்றும் நோக்கில் போட்டியிடும் ராஜபக்சேவை வீழ்த்த அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்துள்ளன. ராஜபக்சே அரசில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த மைத்ரிபால சிரிசேன தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு எதிராக களம் புகுந்துள்ளார்.
இந்நிலையில் முக்கிய எதிர்க்கட்சிகளான இடது மற்றும் வலதுசாரிகள் மைத்ரிபாலவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்நாட்டின் முக்கிய புத்தபிக்கு அமைப்புகளும் மைத்ரிபாலா வெற்றி பெற வாழ்த்தியுள்ளன. இன்று மாலை பொலநுருவாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளன.
ராஜபக்சேவுக்கு மேலும் ஒரு அடி விழுவது போல், அவரது அரசில் பொது நிர்வாகத்துறை மந்திரியாக இருந்த நவீன் திஸ்சநாயகேவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஊழல் மிகுந்த அரசில் தொடர தான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார். தற்போதுள்ள நிலையில் ராஜபக்சே மற்றும் மைத்ரிபாலா ஆகிய இருவருக்குமான போட்டியில், வெற்றியை தீர்மானிப்பது வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின் வாக்குகளாக தான் இருக்கும் என்று தெரிகிறது. அநேகமாக இம்முறை அதிபர் ராஜபக்சே தேறுவது கடினம் என்றே தோன்றுகிறது.