புதிய ஜனாதிபதி தெரிவையடுத்து நாட்டில் புதிய அரசு அமையப்பெற்றதுமல்லாமல் பிராந்திய ஆட்சியிலும் மாற்றங்கள் ஏற்பட்டு நாட்டின் அரசியலில் புதிய திருப்பத்துடன் மக்கள் மீதிருந்த சுமைகளும் குறையத் தொடங்கிவிட்டன, அதாவது தமிழர்கள் சிங்களவர்களுக்கு சுதந்திரத்தை மீண்டும் வழங்கிவிட்டார்கள் இனி தமிழர்களுக்கு எப்போது சுதந்திரம்? என்பது மட்டும் தான் மீதி என்ற நிலையே உள்ளது. இந்நிலையை ஏற்படுத்துவதற்கு முன்னர் சிங்கள மக்கள் மத்தியில் பாரிய அரசியற் பணியை தற்போதுள்ள அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் செய்ய வேண்டிய நிலையிலுள்ளனர். அதாவது சிங்கள மக்களுக்குள் ஆழவேரூட்டப்பட்டுள்ள பயங்கரவாதம் என்ற பீதி அகழவில்லை.
கடந்த மகிந்த அரசாங்கம் தனது போரை நடத்துவதற்காக சிங்கள மக்களின் மனங்களை வெல்வதற்கு இலங்கையின் பல பாகங்களிலும் பேரூந்து குண்டு வெடிப்புக்களை நிகழ்த்தி வைத்தது, இக் குண்டுத்தாக்குதல்களுக்கு விடுதலைப்புலிகளிருந்து வெளியேறியிருந்த முன்னாள் போராளிகளை பயன்படுத்தினர். இத் தாக்குதல்களை புலிகள் அன்று தாங்கள் பொறுப்போற்றதாக அறிவிக்கவுமில்லை புலம் பெயர்ந்திருக்கும் ஆதரவாளர்களின் மனங்களை குளிரப்படுத்துவதற்காக அத் தாக்குதல்களை மறுக்கவுமில்லை. இச் சர்ந்தப்பத்தை பயன்படுத்தி மகிந்த அரசு சிங்கள மக்களின் மனங்களை வென்றது “பாண் ரூபா 100 ஆனாலும் பரவாயில்லை ஜனாதிபதியே போரை முடித்து வையுங்கள்“ என சிங்கள மக்கள் அன்று வாக்களித்தனர், இது தான் அவருக்கு நாட்டு மக்ளின் மீது சவாரி செய்ய வசதியாக அமைந்தது.
அத்தனை சிங்கள மக்களின் மனங்களிலும் புலியெதிர்பு பயங்கரவாதம் ஆழவேரூண்டப்பட்டுவிட்டது அதை அறுத்தெறிந்திடவிடாதபடிக்கு கடந்த 10 வருட ஆட்சிக்காலத்தில் மிகவும் உரமேற்றப்பட்டுமிருந்தது. தமிழ்கிராமங்களின் சிங்கள பெயர் மாற்றம், தமிழர் பகுதிகளில் வியாபார வாய்ப்புக்கள், நாமலின் ஆசியுடன் தமிழ் பெண்களுக்கும் சிங்கள இராணு சிப்பாய்களுக்கும் நடைபெற்ற திருமணங்கள் என பலப்பல, நாட்டில் இத்தனை அட்டூழியங்கள் இடம்பெற்றும் சிங்கள மக்களின் கண்கள் மறைக்கப்பட்டதற்குக் காரணம் இது தான். சிங்கள மக்கள் மத்தியில் ஆழபாய்ச்சப்பட்டுள்ள “புலியெதிர்ப்பு பயங்கரவாத“ திரை நீக்கப்பட வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
இச் ஜதார்த்த சூழ்நிலையை தமிழ் அரசியல் வாதிகளும் அறியாததல்ல, இப்படியே காலா காலமாக பேரினவாதத்திற்கு தீனிபோட்டு போட்டு தமிழர்ளின் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்ற விடயம் அரச பல்லவி ஆகிவிட்டது. இந்தப் பல்லவிக்கு சரணங்களாக தூரநோக்கற்ற சுயநல அரசியல் செயற்பாடுகள் தமிழ் அரசியலாளர்களிடம் இருப்பது தான் கடும் வேதனையான விடயம். இவர்களின் தூரநோக்கற்ற துள்ளியமற்ற குறுகிய வட்டத்திலான சுயநல அரசியலினால் தமிழினம் மேலும் பல கோணங்களில் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது தான் உண்மை.
இன்றைய இவ் ஜதார்த்த சூழ்நிலையில் சிங்கள ஆட்சியாளர்களின் கபடத்தை நீக்குவதற்கு ஒவ்வொரு சிங்கள மக்களையும் உசிப்பிவிடுவது தமிழர்களினதும், தமிழ் அரசியல்வாதிகளினதும் கையில் தான் உள்ளது.தற்போதுள்ள அரசையும், புதிய ஜனாதிபதி மைத்திரியையும் இயக்குவது தற்போதுள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுமே, ஆப்படிப்பதில் வல்லவர்களான இவர்கள் கடந்த காலத்தில் செய்தவை மறப்பதற்கில்லை, இன்றும் தமிழினம் நாதியற்று இருப்பதற்கு கருணா என்ற துரோகியை உருவாக்கிய பொருமையும் ரணிலுக்கு உண்டு என்பதையும் மறந்துவிடவா முடியும்?
ஆயுதத்தை விட அறிவை பிரயோகித்து மென்மை போக்கை கையாண்டு போராளியை துரேகியாக்கி எவ்வாறு தமிழர்களின் இராணுவ பலத்தை நொறுக்கினார்களோ அதே மென்மை போக்கையே தற்போதும் பின்பற்றும் இவர்களை எதிர்க்க புலம் பெயர் தேசத்திலிருக்கும் தமிழீழ செயற்பாட்டாளர்கள் எத்தனை பேருக்கு அரசியல் விவேகம் இருக்கின்றது? என்பது கேள்விக்குறிதான்.
இலங்கையின் அன்நியர் வரலாற்றில் ஒல்லாந்தரும், போத்துக்கேயரும் போரில் தோல்வியடைந்தமைக்கு இலங்கையின் பொருந்தாத காலநிலை தான் காரணம் என வரலாற்றில் படித்ததை அப்படியே கடந்த கால போராட்ட ஆய்வுகளுக்குள் ஜதார்த்தத்தை புரியாமல் இணைத்துவிட்டு, (ஆதாரம் இலங்கையின் தமிழ் வாராந்த பத்திரிகைகளின் முன்னைய பதிப்புக்களை மீள்பார்வையிடவும்) தமிழ் மக்களுக்கு ஜதார்த்த அரசியல்,சூழ்நிலைகளை மறைத்து தமிழர்களையும் போராட்டத்தையும் பிரமைக்குள் வழிநடத்திய பெருமைக்குரியவர்களே புலம் பெயர் தமிழ் இராணுவ,அரசியல் ஆய்வாளர்களாக தொடர்ந்தும் உலாவருகின்றனர். இவர்களை மீறி ஆக்கபூர்வமான கருத்தக்களை முன்வைப்பவர்கள் தற்போது மிகவும் எளிதாக துரோகிகள் என பட்டம் சூட்டப்படும் சூழலும் நிலவுகின்ற இக்கட்டான காலத்தில் தான் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். எனவே தான் தமிழர்களின் அரசியல் விவேகம் எங்கு இருக்கின்றது? என்ற கேள்வி எழுகின்றது. இத்தனை தடைகளையும் தாண்டி எப்படி மென்மையான, தூரநோக்கிலான ஒரு போக்கை கையாளவேண்டும்? என்பதே இன்று தமிழர்கள் முன்னுள்ள கேள்வி.
சிங்கள மக்கள் தாமாகவே தமிழர்களின் உரிமைகள் நியாயமானவை என சிந்திப்பதற்கான சூழழை தமிழ் அரசியல் வாதிகள் எவ்வாறு ஏற்படுத்த வேண்டும்? என்பதே சிந்தனை. இக் கருத்தை நடைமுறைச் சாத்தியமற்றது என கூறுபவர்களுக்கு சிந்திக்க ஒன்றைக் கூறமுடியும். இன்று நாம் எவ்வாறு கைத் தொலைபேசியிலேயே காலநிலையை கணிப்பிட முடிகின்றது? அது போலவே செயல்முறையிலான சிலகருவிகளின் பதிவுகளாகத்தான்.
சிங்களமக்களின் பீதிகளை நீக்க தமிழ்மக்கள் மீது இராணு அடக்குமுறையை திணிக்க முடியும் என்றால், தமிழ் மக்களின் நியாயத்தை கூற என்ன செய்ய வேண்டும்? தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு மீண்டும் சுதந்திரத்தை பெற்று கொடுத்துவிட்டார்கள், சிங்கள மக்களுக்கு அதை எவ்வாறு உணர வைக்க வேண்டும்? பறிபோன உரிமைகளையும், பதவிகளையும் தமிழ் மக்கள் சரத்பொன்சேகாவிற்கு மீட்டுக்கொடுத்ததற்கு அவர் காட்டியிருக்கும் நல்லெண்ணத்தை யார் கொண்டிருப்பார்கள்?
வடக்கு கிழக்கில் இராணுவம் நிலை கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து 12.01.2015 “தி ரைம்ஸ் ஒவ் இன்டியா” பத்திரிகைக்கு சராத்பொன்சேகா வழங்கியிருக்கும் செவ்வி கடும் கடுப்பை ஏற்றிவிடுகின்றது, அவர் கூறியிருக்கும் நன்றியில்லாத கருத்துக்கு திட்டுவதற்கென்றே வார்த்தைகளை புதிதாக உருவாக்க தோன்றுகின்றது.
புலியெதிர்ப்பு பயங்கரவாத்தை மீண்டும் கூறிக் கூறி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி தமது காலத்தை ஓட்டுவதற்கு சில சக்திகள் அதாவது சரத்பொன்சேகா, விமல்வீரவன்ச போன்றவர்கள் விரும்புகின்றார்கள். இவர்களுக்கு தீணிபோடுவதற்கும் தூரநோக்கமற்ற தமிழ் அரசியல்வாதிகள் தங்களையறியாமல் துணைபோவது தான் வேதனை.
அண்மையில் ஆணைக்கோட்டைப் பகுதியில் இடம் பெற்ற கவணயீர்ப்பு அவசியமானதொன்றுதான் ஆனால் அதனை தமிழ்மக்களுக்கு எதிராக எப்படி திசை திருப்புவார்கள் என்பதில் தான் விடயம் தங்கியிருக்கின்றது. இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பயங்கரவாதமாக திருப்பப்படும் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளினால் மரபுவழித்தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற முக்கிய கோரிக்கைகளை கைவிட்டுவிட்டு ஆகக் கூடியது வாழ்வுரிமை, வதிட உரிமை , தொழில் உரிமை என்றாகிவிட்டது. மேலும் இந்த நிலையிலும் ஆக் குறைந்த உரிமையை ஆகக் கூடிய உரிமையாக கேட்கும் சூந்நிலை நாளை உருவாகுவதை தடுப்பது அவசியம். அதாவது புதிய ஜனாதிபதி மைத்திரியிலான அரசு உள்நாட்டு, சர்வதேச அரசியல்களில் மென்மையான போக்குகளை கையாள்வதன் மூலம் தமிழர்களுக்கு குரல்கொடுப்பதற்கு தமிழர்கள் அவசியமில்லை என்ற நிலையையே எடுக்கவுள்ளது என்பது உண்மை, இதனால் புலம் பெயர் புலிச் செயற்பாடுகள் இலகுவில் முடக்கப்பட்டுவிடும் என்பது ரணிலின் திட்டம்.
ஏற்கனவே தலைவரின் மரணம் தொடர்பான சர்ச்சையை அடிப்படையாகக் கொண்டும், பல்வேறு தலைமைகளின் தோற்றங்களும் என புலிகளின் செயற்பாடுகள் தாமாக முடக்கப்பட்டுவிட்டன. தங்களுக்குத் தாங்களே உள்வெட்டுக்கொத்து சகதிகளை பூசிக்கொண்டதினால் மக்கள் மத்தியிலும் வெறுப்பு அதிகரித்திருந்தன, இவற்றை மக்கள் மனங்களிலிருந்து நீக்குவதற்கு மகிந்தவின் ஆட்சி நிலவிய போது, அவ்வப்போது ஐ.நா நோக்கிய பயணங்கள் என்ற செயற்பாடுகள் பெரிதும் உதவியிருந்தன, அந்த சர்ந்தப்பத்தையும் தற்போதுள்ள அரசாங்கம் தடுக்கவுள்ளது. இந்த இடத்தில் தான் தமிழர்களின் உரிமைப்போராட்டம் எந்த தரத்தை அடையவுள்ளது என்ற சங்கடம் உருவாகி நிற்கின்றது. நரிக்குணமுள்ள இவ் அரசுக்கு சர்வதேச ஆதரவு மிகப்பலமாக இருக்கும் இப் பின்னனியில் தமிழ் அமைப்புக்களால் ஈடுகொடுக்க முடியுமா?
இவ் அரசுடன் நல்லெண்ணங்களை வெளிப்படுத்துவதன் ஊடாக தான் சிலவிடயங்களை முன்னெடுக்க முடியும், ஆனால் புலம் பெயர்ந்து வாழும் தமிழர் அமைப்புக்களால் அது சாத்தியப்படுமா? நிச்சயமாக சாத்தியப்படாது, ஏனெனில் பகட்டுக்கென்றாலும் அரசை எதிர்க்க வேண்டும் என்ற கொள்கையில் தான் செயற்பாடுகள் உள்ளன, உதாரணமாக ஜே.டி.எஸ் என்ற அமைப்பினால் சனல் 4 தொலைக்காட்சிக்கு யைளிக்கப்பட்ட காணொளி பதிவு வெளிவரும்வரை , அதாவது இலங்கையின் கொலைக்களம் போர்க்குற்றம் ஆவணப்படம் சிங்கள ஊடகவியலாளர்களாலும் , வெள்ளைக்காராலும் முன்வைக்கப்படும் வரை 2009 “மே” க்கு பின்னர் புலம் பெயர் புலிகள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்கது என்ற தெரியாத சூழ்நிலையில் “தலைவர் செத்தார்-வருவார்” என்ற சேறு பூச்சுக்களும், ஒருவரை ஒருவர் திட்டி தீர்க்கும் அரசியலாகத்தான் இருந்தது.
தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் ரத்தம் சிந்தும் போராட்டமாகவல்ல நியாயாமான யோசனைகளை முன்வைப்பதன் மூலம் தீர்க்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாயகத்தில் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்படும் அநீதிகளைக் காட்டி புலம்பெயர் தமிழ் அரசிலயல் குழுக்கள் மற்றும் ஸ்ரீலங்காவின் புலனாய்வாளர்களும் நல்ல வருமானமீட்டுகின்றார்கள் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்.
நாட்டிலுள்ள அசாதாரண சூழ்நிலைகளை காரணம் காட்டி அகதி தஞ்ச கோரிக்கைக்காக பலர் நாடுகடத்தப்படுகின்றனர், வெளிநாடுகளில் பணத்தைக் கொட்டி உடம்பில் தழும்புகளை ஏற்படுத்தி அகதி அந்தஸ்தும் பெற்றிருக்கின்றார்கள், இவர்களை நாடுகடத்தும் முயற்சியில், புலம் பெயர் அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலரும், ஸ்ரீலங்காவின் புலனாய்வாளர்களும், விமானதளதுறை அதிகாரிகளும் மற்றும் சுங்கதுறை அதிகாரிகளும் இணைந்துமே இவ் சட்டவிரோத வெளிநாட்டு குடியேற்றத்தை நடாத்தி வருகின்றார்கள், இதனால் பல லட்சம் ரூபாய்களை தமிழ் சமூகம் இழந்து நிற்கின்றனர், அத்துடன் மெல்ல மெல்ல தமது தாய் நிலத்தையும் இழந்துவருகின்றதை உணராமல் இருக்கின்றார்கள்.
ஆகவே தான் எம்மைச் சுற்றி நடக்கின்ற ஒவ்வொரு சிறிய விடயத்திலும் பெரிய பெரிய அழிவுகள் ஒழிந்திருப்பதை நாம் அறியாமலே
எமது உணர்ச்சிகளை கொட்டிவிடுகின்றோம், எம்முடைய உணர்ச்சிகள் குறிப்பிட்ட பிரதேசத்துக்குள் மட்டுமே அடங்கிவிடுகின்றன. புலம் பெயர் தமிழ் சமூகத்தில் ஆரேக்கியமான அரசியல் நகர்வுகள் எதுவும் அற்ற சூழலே பெருமளவில் காணப்படுகின்றது.
ஆகவே தாயகத்தின் சூழ்நிலைக்குத்தக்க ஆக்கபூர்வமான அறிவுசார்ந்த அரசியல் நகர்வுகளை ஒற்றுமையாக தமிழர்கள் முன்னெடுப்பதன் ஊடாக சிங்கள மக்களை தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க குரல் கொடுக்க வைப்பதே தமிழர்களின் பெலம் என்ன தற்போது எண்ணத் தோன்றுகின்றது.